Tuesday, June 30, 2009

அஜீத்துக்கும் பாட்டெழுதுவீரா அவ்வையே?

கல்லூரி என்றாலே கலாட்டாதான். அதில் கொஞ்சம் இலக்கியத் தன்மையும் இருந்தால் ருசிகரமாகத்தான் இருக்கும். அதற்கான முஸ்தீபுகளோடு நவீன கால "அவ்வை'யுடன் பிராட்வேயில் அமைந்துள்ள கன்னிகா பரமேஸ்வரி கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லூரியில் ஒரு விசிட் அடித்தோம். அது கல்லூரி இடைவேளை நேரம்.நவீன கால அவ்வையைக் கண்டதும் ஒரு பட்டாளம் சூழ, அங்கு ஒரு விவாதமே அரங்கேறத் தொடங்கியது. சரண்யா: அந்தக் காலத்துல அவ்வையார் என்று பெயரை மாற்றியது போல, இந்தக் காலத்தில் உங்கள் பெயர்? அவ்வை: சங்க காலத்தில் "அவ்வை'யார். நவீன காலத்தில் ஒ-ள-வை-யார். ஷாலினி: சங்க இலக்கியத்தில் கலைஞர்களை அரசர்களைப் பற்றி பாடியது போல், தற்காலத்தில் அஜித், விஜய்யைப் பற்றி பாடல் எழுத முடியுமா? அவ்வை: தல என்றும் தளபதி என்றும் அவர்களைப் பற்றித்தான் ஏற்கெனவே படங்களுக்காகக் பாடல் எழுதிக் கொண்டிருக்கிறார்களே? அர்ச்சனா: சுட்ட பழம் சாப்பிட்டது பற்றி..? அவ்வை: ரொம்ப சூடா இருந்துச்சு.

ஸ்ருதி: அந்தக் காலத்துல உங்கள் பாடலுக்கு கே.பி.சுந்தராம்பாள் குரல் கொடுத்தது போல, இந்தக் காலத்துல யாரு குரல் கொடுத்தா பொருத்தமா இருக்கும்? அவ்வை: தற்காலத்தில் பாடகி சுசிலாதான் என் குரலுக்கு மெருகேற்றுவார். இந்துமதி: அதியமானிடம் நெல்லிக்கனியை பெற்றது பற்றி? அவ்வை: பெற்றவர் மட்டுமில்லை, கொடுத்தவரும்தான் இறவா புகழோடு இன்னமும் நம் நெஞ்சினில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். விட்டுக் கொடுப்போர் கெட்டுப் போவதில்லை. பத்மாவதி: ஆத்திச்சூடியை தலைகீழாகக் கூற முடியுமா? அவ்வை: முதலில் நீங்கள் ஆத்திச்சூடியை நேராக கூறுங்கள். பிறகு நான் தலைகீழாகக் கூறுகிறேன். ஸ்ருதி: செம்மொழியில் உள்ள தமிழ்மொழியை அதிகம் பேர் பயிலா நிலை தற்போது ஏற்படுகிறதே? அவ்வை: சிறுவயதில் தமிழில் நாம் "அம்மா' என்ற வார்த்தையையே முதலில் கற்கிறோம். ஆனால் தற்காலத்தில் குழந்தைகளுக்கு மம்மி, டாடி என்ற போன்ற வார்த்தைகளையே பெற்றோர் கற்பித்தால் எவ்விதத்தில் செம்மொழியைப் பேணிக்காக்க முடியும்? ஷாலினி: தமிழில் வெளிவந்த "தமிழ் எம்.ஏ.,' திரைப்படத்தில்கூட தமிழ் படித்தால் இந்த நிலைதான் ஏற்படும் என்று தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியுள்ளார்களே? அவ்வை: நாம் இன்ன படித்தால் தான் இந்த நிலைக்கு வரமுடியும் என்பதில்லை, கடவுள் நம் அனைவருக்கும் சமமான அறிவைக் கொடுத்திருக்கிறார். அதை நாம் முறையாகப் புரிந்து செயல்பட்டால் எந்த நிலையையும் அடைந்திட முடியும்.

பாரதி: சங்க காலத்தில் தோன்றிய நல்ல இலக்கியங்களைப் போல தற்காலத்தில் தோன்றாததற்குக் காரணம்? அவ்வை: காலம் தோறும் இலக்கிய உத்திகள் மாறிக் கொண்டே இருக்கின்றன. இன்றும் உலக இலக்கியங்களுக்கு ஒப்பான இலக்கியங்கள் தமிழில் தோன்றிக் கொண்டுதான் இருக்கின்றன. தனலெட்சுமி: அதியமானிடம் நீங்கள் பாராட்டிய நட்பைப் போல, தற்காலத்தில் உங்கள் நட்பு யாருடன் தொடர விரும்புகிறீர்கள்? அவ்வை: செம்மொழியை பேணிக்காக்கும் முதல்வர் கலைஞர்தான் என் நட்புக்குரியவர். ஃபாமிதா: புறாக்கள் மூலம் தூது விட்டு, தற்போது செல்போன் மூலம் எஸ்எம்எஸ் பரவுகிறதே? அவ்வை: வானில் பறக்கும் வானூர்தியையும், மிதக்கும் கப்பலையும் கண்டுபிடித்தவர்களுக்கு உணவாக பறவைகள் இறையாகும் போது, எங்கிருந்து அவற்றைக் கொண்டு தூதுவிட முடியும் என்பதால்தான் தொ(ல்)லைபேசியைக் கண்டுபிடித்தனர். இது செல்விடு தூது காலம். புவனேஸ்வரி: பெண்களுக்குச் சமகால உரிமை வேண்டும் என்பது அந்தக் காலத்தில் பின்பற்றப்பட்டுள்ளதா? அவ்வை: நிச்சயமாக. என்னைப் போல் பல பெண்கவிஞர்கள் அப்போது இருந்தனரே. அர்ச்சனா: ஆணுக்கு பெண் சரிநிகர் சமானம் என்பது பற்றி உங்கள் கருத்து? அவ்வை: உரிமை என்பது ஒருவரை ஒருவர் ஒப்பிட்டு பார்ப்பது அல்ல. கலைவாணி: நீங்கள் காவி உடை அணிந்து காவியம் படைத்தீர்கள். தற்போது உடையில்கூட பெண்களுக்குப் பிரச்னை ஏற்படுகிறதே? அவ்வை: ஆடை அணிவது என்பது அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது. அபிராமி: உங்களுக்கு சினிமாவுல நடிக்க வாய்ப்பு கிடைத்தால் என்ன வேடத்தில நடிப்பீர்கள்? அவ்வை: நான் பெண்பாற் கவிஞராகவே விரும்புகிறேன். கீதீகா: அப்படியென்றால் இந்தக் கால இளைஞர்களுக்கு உங்கள் கவிதை மூலம் உணர்த்துவது? அவ்வை: குட்ட குட்ட குனிந்து இரு.. உடையும் நிலை வந்தால் நிமிர்ந்து விடு. சபாஷ் அவ்வையே -என எல்லோரும் சேர்ந்து சல்யூட் வைக்க, பதிலுக்கு அவ்வை வைத்தார் அட்டகாசமான சல்யூட்!

No comments:

Post a Comment