Tuesday, June 30, 2009

ஆட்சியாளர்களும் ,ஊடகங்களும் (இலங்கை ) தமிழர்களும்- முதல் பகுதி

1950களில் மத்தியிலும் மாநிலத்திலும் காங்கிரஸ் 1950களில் ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ. வி. அழகேசன் அப்போது நடுவணரசில் ரயில்வே அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயில் கவிழ்ந்து 20, 30 பேர் வரை பலியானார்கள். அப்பொழுது வளர்பருவத்திலிருந்த திமுக, சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது. அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா? என்னும் வாசகங்களுடன் வெளியிடப்பட்ட அந்தச் சுவரொட்டி பரவலான கவனத்தைப் பெற்றது.

அதேபோல் 1960களின் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னைத் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962இல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது அந்தச் சம்பவத்தை முன்வைத்துச் சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது திமுக. ரத்தக்கறை படிந்த சட்டையைக் கையில் ஏந்திக் கண்ணீர் வடிக்கும் பெண்ணின் படத்துடன் கூலி உயர்வு கேட்டார் அத்தான், குண்டடிபட்டுச் செத்தான் என்னும் வாசகங்களுடனும் தென்பட்ட அந்தச் சுவரொட்டி துறைமுகத் தொழிலாளர்களின் படுகொலைக்கு நியாயம் கேட்டுத் தமிழ்நாடு முழுக்கப் பயணித்தது. அடுக்குமொழியில், அளவான வார்த்தைகளில் சுவரொட்டி போடுவது திமுகவுக்குக் கைவந்த கலை. அவற்றில் இடம்பெற்ற கருத்துப்படங்களும் கூர்மையான முழக்கங்களும் பெரும் வரவேற்பைப் பெற்றன.

திரைப்படம், பத்திரிகை, மேடைப் பேச்சு இவற்றோடு சுவரொட்டியும் திமுகவின் வலுவான பிரச்சார ஆயுதமாக மாறியது. அப்போதிருந்த பேராயக் கட்சி அரசு, ஒவ்வொரு சுவரொட்டியும் காகிதத்தில் சுருட்டப்பட்ட குண்டு என்பதை அறியவில்லை. சுவரொட்டிகளை அச்சிடுவதற்கோ ஒட்டுவதற்கோ எந்தத் தடையும் விதிக்கப் பட்டிருக்கவில்லை. அப்போதைய அதிகாரவர்க்கம் நேரடியான அல்லது மறைமுகமான உருட்டல், மிரட்டல்களில் ஈடுபடவில்லை. அதனால் சுவரொட்டிகளில் வெளிப்படையாக அவற்றை அச்சிட்ட அச்சகங்களின் பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

சிங்கள ராணுவத்தினரின் தாக்குதலுக்குள்ளாகிச் சிதறிக்கிடக்கும் நூற்றுக்கணக்கான ஈழத் தமிழர்களின் உடல்களைக் காட்சிப்படுத்தும் சுவரொட்டிகளை அச்சிட்டு வெளியிட்டன ஈழத் தமிழர் ஆதரவு இயக்கங்கள். ஆனால் திமுக அரசும் அதிகார வர்க்கமும் அவற்றைச் சுதந்திரமாக அச்சிடுவதற்கும் ஒட்டுவதற்கும் அனுமதிக்காமல் நேரடியாகவும் மறைமுகமாகவும் அச்சுறுத்தி ஒடுக்கின. முன்பு ஒரு எதிர்ப்பு இயக்கமாகத் தான் முன்னெடுத்த போராட்ட முறைகளை இப்போதைய எதிர்ப்பு இயக்கங்கள் கைக்கொள்வதை ஆளும் வர்க்கமாக மாறிவிட்ட திமுக அரசு தடைசெய்கிறது.

மதுரையில் உள்ள தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழினப் படுகொலைக்குத் துணைபோகும் காங்கிரசைத் தோற்கடிப்பீர், என்னும் வாசகங்களுடன் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்டது. தமிழினப் படுகொலையை நடத்துவது சிங்கள இனவெறி அரசு என்பது போல் தோன்றினாலும் உண்மையில் இந்தியாதான் போரை நிகழ்த்துகிறது என இலங்கை ராணுவத் தளபதி ஒருவர் சொன்னது இந்த இடத்தில் நினைவுகூரத்தக்கது. இந்தியாவின் துணையில்லாமல் நாம் இவ்வளவு பெரிய வெற்றியை எட்டியிருக்க முடியாது. இந்தியா எல்லா வகையிலும் நமக்கு ஒத்துழைத்ததால்தான் நம்மால் விடுதலைப்புலிகளை ஒழிக்க முடிந்தது என டி சில்வா என்ற அமைச்சர் இலங்கை நாடாளுமன்றத்தில் ஒப்புதல் தந்துள்ளார். அப்படியிருக்க தமிழினப் படுகொலையை நடத்தும் காங்கிரசைத் தோற்கடிப்பீர் என்றுதானே உங்கள் சுவரொட்டியின் வாசகங்கள் இருந்திருக்க வேண்டும் எனச் சுவரொட்டியை அச்சிட்டு வெளியிட்ட மதுரை நண்பர்களிடம் கேட்டேன். அப்படித் தான் போடும்படி சொன்னோம் அச்சகத்துக்காரர் மறுத்துவிட்டார் என்றார்கள். பிறகு அந்தச் சுவரொட்டி அச்சகத்தின் பெயரில்லாமல் வெளியானது.

ஈழப் பிரச்சினையை மையப் படுத்தி அ. மார்க்ஸ் அளித்திருந்த நேர்காணல் ஒன்றுக்குப் பதிலுரையாக யாருக்காகப் பேசுகிறார் அ. மார்க்ஸ் என்றொரு சிறு வெளியீட்டை நான் கொண்டு வந்தேன். அதில் அச்சகத்தின் பெயர் இருக்காது. ஈழப் பிரச்சினை தானே அச்சகத்தின் பெயர் வேண்டாம் எனச் சொன்னார் அச்சக உரிமையாளர். அச்சக உரிமையாளர்களுக்குக் காவல் துறை கொடுத்த நெருக்கடியே இதற்குக் காரணம்.

காங்கிரசுக்குப் போடும் வாக்கு தமிழினத்துக்குப் போடும் தூக்கு என்னும் முழக்கம் கடந்த நாடாளு மன்றத் தேர்தலில் ஈழ ஆதரவாளர்கள் முன்வைத்த முக்கியமான முழக்கமாக இருந்தது. ஈரோட்டில் காங்கிரஸ் வேட்பாளரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு எதிராகக் கருத்துப்படங்கள் அடங்கிய சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. அந்தச் சுவரொட்டியை ஒட்டியதற்காகத் தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சியினர் கைதுசெய்யப்பட்டனர். அச்சக உரிமையாளர்கள் இத்தகைய சுவரொட்டிகளை அச்சிட மறுத்ததால் அண்டை மாநிலங்களுக்குச் சென்று அவற்றை அச்சகத்தின் பெயரில்லாமல் அச்சிட்டுக் கொண்டுவர வேண்டிய அளவுக்கு நிலைமை மோசமாக இருந்தது. ஜனநாயகம் குறித்த திமுகவின் பார்வை இரட்டைத் தன்மை கொண்டது. எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஜனநாயகத்தின் புரவலனாக இருந்து குரல்கொடுக்கும் திமுக, ஆளும் கட்சியாக மாறும்பொழுது அரசு எந்திரத்தைப் பயன்படுத்தி அதை நசுக்க முயல்கிறது.

தேர்தலுக்கு முந்தைய நாள் வந்த உயர் நீதிமன்றத் தீர்ப்பு காங்கிரஸ் கட்சியின் விருப்பங்களுக்கு எதிராகவே இருந்தது. உயர் நீதிமன்றத் தீர்ப்பைப் பயன்படுத்திக்கொண்டு உடனடியாக அவற்றை ஒளிபரப்பத் தொடங்கியது மக்கள் தொலைக்காட்சி. 12.5.09 பிற்பகலில் தொடங்கிய இந்த ஒளிபரப்பு 13.5.09 காலையில் காவல் துறையினரால் தடைசெய்யப்பட்டது. 12ஆம் தேதி இரவு சென்னை நகரில் ஏற்பட்ட மின்தடைக்கும் மக்கள் தொலைக்காட்சியில் இந்தக் குறும்படங்கள் ஒளிபரப்பப்பட்டதற்கும் தொடர்பு இருப்பதாகச் சொல்லப்பட்டது. அன்று அஞ்சா நெஞ்சன் அழகிரி போட்டியிட்ட மதுரையில் மின்தடை இல்லைதான். அங்கு மக்கள் தொலைக்காட்சியின் ஒளிபரப்பை கேபிள் ஆபரேட்டர்கள் துண்டித்துவிட்டனர்.

No comments:

Post a Comment