Sunday, July 5, 2009

விஜய் அரசியலுக்கு வர என்ன செய்ய வேண்டும்


நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது பற்றி, ரசிகர் மன்றத்தினருடன் கலந்து ஆலோசித்துள்ளார். அவர்களும், "நீங்கள் அரசியலுக்கு வாருங்கள்; நாங்கள் எல் லாரும் உங்கள் பின்னால் இருக்கிறோம்' என்று சொன்னதை நம்பி, அரசியலில் குதிக்கப் போகிறார்.


"நான் நிறைய பத்திரிகைகள் படிக்கிறேன். அதனால் அரசியல் நடப்பு எனக்கு தெரியும். ஒரு சாமான்யனுக்கு எந்தளவு அரசியல் தெரியுமோ, அந்தளவுக்கு எனக்குத் தெரியும்' என்று கூறியுள்ளார். இப்படி இவர் கூறியது, இன்னும், தான் அரசியலில் போதிய அனுபவம் பெறவில்லை என்பதையே காட்டுகிறது.


ஒரு கட்சி ஆரம்பித்து, அதன் தலைவராக ஆக நினைக்கும் அவருக்கு, 49 படத்தில் நடித்த அனுபவம் மட்டும் போதாது. ஜனநாயக நாட்டில் ஒருவர், எந்த கட்சியையும் ஆரம்பிக்கலாம், ஆதரிக்கலாம், நடத்தலாம்; ஆனால், மக்கள் மனதில் இடம் பெறுபவரே, ஆட்சியைப் பிடிப்பவர். அந்த வகையில், எம்.ஜி.ஆர்., - என்.டி.ஆர்., போன்றவர்களை உதாரணமாக சொல்லலாம். ஆனால், தற்போதைய ரசிகர்களை நம்பி, ஆந்திராவில் கட்சியை ஆரம்பித்து, தவித்து வரும் பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, அங்கே சூப்பர் ஸ்டார் தான்; ஆனால், அவரை முழுமையாக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லையே!

"ஒருவன் எதைப் பெற முழுத் தகுதியுடையவனாக இருக்கிறானோ, அவன் அதை ஒரு நாள் பெற, இப்பிரபஞ்சத்தில் எந்த சக்தியாலும் தடுத்து நிறுத்த முடியாது' என்ற விவேகானந்தரின் கூற்றுப்படி, விஜய் அரசியலுக்கு வரட்டும். ஆனால், அனுபவம் பெற்று, மக்களுக்கு சேவை செய்தால், அவர்களாகவே உங்களை அரசியலில் ஆதரிப்பர். அதை விட்டு, ரசிகர் கூட்டத்தை நம்பி இறங்கினால், மண் குதிரையை நம்பி, ஆற்றில் இறங்கிய கதையாகி விடும்.

No comments:

Post a Comment